தேனி: தேனி அருகே ஈஸ்வரன் நகரில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 1 மணி அளவில் காவல் நிலையம் பூட்டி இருந்த நிலையில், இரண்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து காவல் நிலையத்திற்குள் புகுந்து பொருட்களை திருடி கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது, அந்த வழியாக இரவு நேர ரோந்து பணியில் வந்த அல்லிநகரம் முதல் நிலை காவலர் முருகேசன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மர்ம நபர்கள் மீது சந்தேகம் அடைந்து அவர்களை சோதித்த போது காவல் நிலையத்தில் இருந்து ஏர்கன் துப்பாக்கி, கை விலங்கு மற்றும் ஏராளமான செல்போன்களை திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது அவர்கள் போலீசாரை தள்ளிவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
அதில் ஒருவரை காவலர் ரமேஷ் துரத்திக் கொண்டு சென்றுள்ளார். இதனிடையே மற்றொரு நபரை முருகேசன் மடக்கிப் பிடித்த நிலையில், மர்ம நபர் தன் கையில் கல்லை எடுத்து காவலர் முருகேசனின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பியுள்ளார். இதனால் தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் தப்பி ஓடிய மர்ம நபரை துரத்திக் கொண்டு ஒருவரை பிடித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.