சென்னை : சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் நூல் வெளியிட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. நூலை தவெக தலைவர் விஜய் வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெம்டும்டேவும் பெற்றுக்கொண்டனர்.
விழா மேடையில் பேசிய விஜய், "அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய நூல் வெளியீடு விழாவில் கலந்து கொள்வது மிகப்பெரிய வரம். ஆனால் கடந்த 100 வருடத்திற்கு முன்னால் நியூயார்க் சென்று, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து சாதித்த அசாத்தியமான மாணவர் அம்பேத்கர்.
அனைத்து சக்திகளும் அம்பேத்கருக்கு எதிராக இருந்தது. ஆனால், ஒரே ஒரு சக்தி மட்டும் தான் நீ படி, எத்தனை தடைகள் வந்தாலும் படி, தொடர்ந்து படி என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அது தான் அந்த மாணவருக்குள்ளே இருந்த வைராக்கியம். அந்த வைராக்கியம் தான் நாட்டின் தலைசிறந்த intellectual ஆக அவர் transforms ஆவதற்கு காரணமாக அமைந்தது.
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யின் மேடைப்பேச்சு (ETV Bharat Tamil Nadu) வன்மத்தை மட்டுமே காட்டிய சமூகத்திற்கு, அரசியல் சாசனத்தை வழங்கி பெருமைத் தேடி தந்தவர் அம்பேத்கர். ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற இந்த புத்தகத்தில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. அதில், Waiting For Visa என்ற தலைப்பில் மொத்தம் 6 விஷயங்கள் உள்ளன. அதில், இரண்டு என்னை மிகவும் பாதித்தது. சமூக கொடுமை தான் அம்பேத்கரை சமத்துவத்துக்காக போராட வைத்தது.
அம்பேத்கர் அவர்கள் இன்று உயிரோடு இருந்திருந்கால் என்ன நினைத்திருப்பார்? இன்றைக்கு இருக்கக்கூடிய இந்தியாவை பார்த்து பெருமைப்படுவாரா? அல்லது வருத்தப்படுவாரா? அப்படியே அவர் வருத்தப்பட்டால் எதை நினைத்து வருத்தப்படுவார்?
நாடு முழு வளர்ச்சி அடையனும்னா ஜனநாயகம் காக்கப்படனும். அந்த ஜனநாயகம் காக்கப்படனும்னா அரசியலமைப்பு சட்டம் காக்கப்பட்டனும், அதற்கான பொறுப்பு, கடமை நம் அனைவரிடமும், இருக்க வேண்டும். அந்த பொறுப்போடும், கடமையோடும் நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் ஆணி வேர் free and fair election. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்.
நான் தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், தேர்தல் சுதந்திரமாகவும், நியாமாகவும் தான் நடக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்க வேண்டும் என்று தோணுகிறது.
இது அமையவேண்டுமென்றால் தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசுக்கு என்னுடைய வலிமையான கோரிக்கை. அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்.14ம் தேதி இந்தியாவின் ஜனநாயக நாளாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்.
அம்பேத்கரை பற்றி யோசிக்கும் போது நிச்சயமாக சட்டம் ஒழுங்கு சமூக நீதி பற்றி யோசிக்காமல் இருக்க முடியாது. இன்றைக்கும் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்று நாம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட அதைக் கண்டுக்கவே கண்டுக்காத ஒரு அரசு மேலே இருந்து நம்மை ஆளுகின்றது.
தமிழ்நாட்டில் வேங்கை வயல் என்கின்ற கிராமத்தில் என்ன நடந்தது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். சமூக நீதி பேசுகின்ற இங்கிருக்க கூடிய அரசு அதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி எனக்கு தெரியவில்லை. இவ்வளவு காலங்கள், இவ்வளவு வருடங்கள் தாண்டி ஒரு துரும்பை கூட கிள்ளி போட முடியவில்லை. இதெல்லாம் இன்று அம்பேத்கர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து செல்வார்.
சம்பிரதாயத்திற்காக மழை தண்ணீரில் நின்று போஸ் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் நானும் அதை சில நேரங்களில் செய்ய வேண்டி இருக்கிறது. மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத, பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணி கணக்குகளை மட்டும் நம்பி இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை இதுதான்.கூட்டணி கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட திருமாவளவன் பங்கேற்க முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சி சார்ந்து எவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும் அவருடைய மனது முழுக்க முழுக்க இன்றைக்கு இங்குதான் இருக்கும்" என்று விஜய் பேசினார்.