சென்னை :சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.
சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் பாலாஜி இன்று( நவ 13) கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்.