சென்னை:முதலமைச்சர் கொண்டுவந்த இரண்டு தீர்மானங்களும் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுவதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், "பெரியார், அண்ணா எந்த மாநில உரிமைக்காக போராடினார்களோ, அந்த மாநில உரிமை முற்றிலுமாக பறிக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
மாநில உரிமைகளை காலில் போட்டு நசுக்கும் ஒரு சர்வாதிகார தன்மையோடு, பன்முகத் தன்மை கொண்ட ஜனநாயக உரிமையை குழி தோண்டி புதைக்கும் எண்ணத்தோடு மத்திய பாஜக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியை தன் வசப்படுத்திக் கொண்டு, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் வங்கியில் இருக்கும் பணத்தை தன் கையில் எடுத்தது கடந்த கால வரலாறு.
இந்திய தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்ற ஒரு சூழல் உள்ளது. இந்திய தகவல் உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்பவர்களும் ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்திய நாட்டின் முப்படைத் தளபதிகளின் பதவிகளைக் காலி செய்து, முப்படைத் தளபதிகளுக்கும் ஒரே சித்தாந்தம் என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தலைவராக நியமிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்திய நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்தவர்களுக்கு, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையிலே ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு, தான் ஏற்றுக் கொண்ட சித்தாந்தத்தின் கருத்தை வெளிப்படுத்தக் கூடியவர்களை இந்த நாட்டின் உச்சபட்ச பதவிகளில் அமர்த்தக் கூடிய ஒரு சூழல் உள்ளது. இன்று இந்தியா என்பது பல்வேறு மொழி வழி தேசிய இனங்களைக் கொண்டு, 546-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களைக் கொண்டு ஒரு கொடையின் கீழ் ஜனநாயக மாண்புடன் சிறப்பாக உள்ளது.