திருச்சி: பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை ஒட்டி, அமமுக சார்பில் டிடிவி தினகரன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டிடிவி தினகரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "போலீஸ் கஸ்டடியில் இருந்தவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தது என்பது தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுகவைச் சேர்ந்த மூன்று பேர் கைதாகி உள்ளனர்.
இந்த நேரத்தில் இச்சம்பவத்தில் கைதாகி உள்ள ஒரு கைதியை போலீசார் என்கவுன்டர் செய்துள்ளது பல சந்தேகங்களை கிளப்புகிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். இதற்கு நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.
அதிமுக ஓட்டு திமுகவிற்கு விழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற பதவியை மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மாதிரியோ, ஜெயலலிதா மாதிரியோ தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு எடப்பாடி வரவில்லை. அங்கு எந்த தேர்தலும் நடக்கவில்லை. அது நியமனம் தான்.
அதிமுக கட்சியை எடப்பாடி பழனிசாமி கபளீகரம் செய்து வைத்துள்ளார். பாவம் தொண்டர்கள் இரட்டை இலை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக வேறு வழியின்றி இருக்கிறார்கள். அங்கு எடப்பாடி பழனிசாமி சொல்லி யாரும் கேட்கவில்லை. விக்கிரவாண்டியில் 82.5 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது. அப்படியானால் மீதி உள்ள 15 சதவீதம் மட்டும் தான் அங்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடாதவர்களா?
இரண்டு ஒன்றியங்களில் நான் வாக்கு சேகரிக்கச் சென்ற பொழுது, அங்கு அதிமுக நிர்வாகிகள் நான் வேனில் இருந்து இறங்கிய பொழுது என்னைப் பார்த்து வாழ்த்து சொல்லி பாமகவிற்கு வாக்களிப்பதாக நேரடியாகவேச் சொன்னார்கள். அவர்கள் பாமக கூட்டத்திலே வந்து கலந்து கொண்டார்கள்.
அமமுக - அதிமுகவுடன் ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அமமுகவை நாங்கள் எந்த சூழ்நிலையில், எந்த காரணத்திற்காக தொடங்கினோமோ அந்த காரணங்களில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சுயநல நபரிடம் ஒரு பதவி வெறி, ஒரு துரோகச் சிந்தனை உள்ளவரிடம் அதிமுக கட்சி இன்று மாட்டிக் கொண்டிருக்கும் பொழுது அந்த கட்சியில் நாங்கள் இணைவோம் என்று கேட்கின்ற கேள்வியே தவறு.
ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜெயலலிதாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து தமிழகத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. இன்றைக்கு எங்களால் தேர்தலில் வெற்றி அடையாமல் இருந்திருக்கலாம். ஆனால், எங்களுடைய லட்சியம், பயணம் என்றைக்கும் தொடரும்.
வருங்காலத்தில் உறுதியாக நாங்கள் வென்றெடுத்து ஜெயலலிதா லட்சியங்களை தமிழகத்தில் கொண்டு செல்வோம். எங்களின் இறுதி சுவாசம் உள்ளவரை அதற்காக போராடுவோம். தூங்குவது போல் நடிப்பவர்களை, சுயநலத்தில் இருப்பவர்களை, பதவி வெறி பிடித்தவர்களை, பணத்திமிரில் இருப்பவர்களை, அதிகாரம் இருந்த காரணத்தினால் பணத்திமிரால் கட்சியை கபளீகரம் செய்து வைத்திருக்கிற தைரியத்தில் உள்ளவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை.
கர்நாடகா காவிரி நீர் தொடர்பான கேள்விக்கு, நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்கு நியாயமானதை கேட்டுப் பெறலாம். தமிழக முதலமைச்சரால் எளிதாக இதற்கு தீர்வு காண முடியும். அவர்களது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி மூலம் தமிழகத்திற்கு நியாயமானதை பெற்றுத்தர முடியும்.
அதற்கு தானே கூட்டணி வைத்துள்ளார்கள். இங்கு வெற்றி பெறுவதற்காகவும், தேர்தலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் இந்த கூட்டணி இருக்கிறது, மக்கள் கவனித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி பேசி தடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தேவையான நீரைப் பெற்று தருவது ஸ்டாலினின் தலையாய கடமை.
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரிப்பது தொடர்பான கேள்விக்கு, அதற்கான துறையை வைத்துள்ளவர் ஸ்டாலின். சம்பந்தமே இல்லாமல் மாவட்ட ஆட்சியரையும், எஸ்பிஐயும் பணி மாறுதல் செய்கிறார். ஆனால், முதலமைச்சர் தான் அதற்கு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது. அது ஆளுங்கட்சி துணையுடன் நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்த ஆட்சியில் போதை கலாச்சாரம் பெருகி இளைஞர்கள் எல்லாம் வேலை வாய்ப்பு இல்லாமல் போதைப் பொருளுக்கு அடிமையாகி, கூலிப்படைகளாக மாறி வருகிறார்கள். அதனால் தான் தினமும் 2, 3 கொலை நடைபெறுகிறது. இதற்கெல்லாம் முதலமைச்சர் வருகின்ற தேர்தலில் பதில் சொல்வார். இதனால் வரும் 2026ஆம் ஆண்டு நிச்சயம் பெரிய மாற்றங்கள் நிகழும்" என்றார்.
இதையும் படிங்க:“நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - அண்ணாமலை வலியுறுத்தல்! - Annamalai demand white paper