விருதுநகர்:பாஜக மதவாதக் கட்சி என்றால், அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி விட்டு தீபாவளிக்கு மட்டும் வாழ்த்து சொல்லாத முதலமைச்சரின் திமுகவும் மதவாதக் கட்சி தான் எனவும், அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக திமுக பாஜகவை மதவாதக் கட்சி என்கின்றனர் எனவும் டி.டி.டி தினகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "மத்திய பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டை மட்டும் புறக்கணித்து விட்டார்கள் எனக் கூற முடியாது.
இது முதலமைச்சருக்கு அழகல்ல:
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வருவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். மக்கள் விரும்பாத காரணத்தினால் தான் டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டுள்ளது. குறிப்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முயற்சியில் தான் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஆனால், திமுக டங்ஸ்டன் திட்டம் தங்களால் தான் கைவிட்டது என்பது போல, தானாகச் சென்று சால்வை, மாலை பெற்றுக்கொள்வது முதலமைச்சருக்கு அழகல்ல.
திமுக சரியாக ஆட்சி செய்யாமல், கடந்த 3 ஆண்டுகளாகத் தான் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுவது வடிகட்டிய பொய். அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கி்றது. திமுக என்ற தீய சக்தியை, மக்கள் விரோத ஆட்சியை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சியை அகற்றுவோம்.
தமிழ்நாட்டில் கேலிக்கூத்தான ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சர் குடும்பத்தைத் தவிர தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை. திமுகவின் குடும்ப அரசியல் என்பது சினிமா துறை போன்று எல்லாத் துறைகளிலுமே அவர்களது ஆக்டோபஸ் கரங்கள் கட்டுப்படுத்தி வருகிறது என்பது உண்மை. அதே போல, இந்த ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதும் உண்மை.