தேனி: தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளான நேற்று (பிப்.24) தேனியில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “ஆறு ஆண்டுகள் கழித்து என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் இங்கு கலந்து கொண்டது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
1999ஆம் ஆண்டு தேனி நாடாளுமன்ற தேர்தலில் எனது வெற்றிக்காக பாடுபட்டவர் ஓபிஎஸ். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், ஒருவரோடு ஒருவர் அன்போடு தான் இருந்தோம். அம்மா வழிநடத்திய இந்த இயக்கத்தை, கபளீகரம் செய்தவரிடம் இருந்து மீட்கவே நாங்கள் ஒன்றிணைத்து உள்ளோம்.
அம்மா என்கிற அன்பு சக்தி எங்களை மீண்டும் ஒன்றிணைத்து இருக்கிறது. அம்மா வழிநடத்திய இயக்கத்தை நாங்கள் மீட்காமல் விடமாட்டோம். அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவன் நான் என்று உங்களுக்குத் தெரியும். பதவிக்காக யார் காலிலும் விழ மாட்டேன்.
ஓபிஎஸ், நானும் அரசியலைத் தாண்டி நல்ல நண்பர்கள். அம்மாவின் ஆட்சியை மீண்டும் நாங்கள் கொண்டு வருவோம். தேனியில் இதே பங்களாமேடு பகுதியில் தான் அம்மா என்னை முதன் முதலாக வேட்பாளராக அறிவித்தார். அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான். அதனால் தான் தேனி என்றாலே தேன் சாப்பிடுவது போன்று இருக்கும்.