தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"செயலிழந்த உளவுத்துறை சட்டம்-ஒழுங்கு சீர்கேடு" - ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு டிடிவி தினகரன், கிருஷ்ணசாமி கண்டனம்! - K Armstrong Murder - K ARMSTRONG MURDER

K Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் புதிய தமிழகம் கட்சி டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன்,ஆம்ஸ்ட்ராங் மற்றும் கிருஷ்ணசாமி புகைப்படம்
டிடிவி தினகரன்,ஆம்ஸ்ட்ராங் மற்றும் கிருஷ்ணசாமி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 1:31 PM IST

சென்னை:பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன், ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு:இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் "ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் முன்பாக கூலிப்படை கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை கண்காணிக்கத் தவறிய உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்திருப்பதோடு, தமிழகத்தில் இது போன்று அடிக்கடி நடைபெறும் கொலைச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் உச்சமடைந்திருப்பதை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

எனவே, காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து தமிழகத்தில் அரங்கேறும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்துகிறேன்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

புதிய தமிழகம் கண்டனம்:அதேபோல் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,"ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை தருகிறது. ஏறக்குறைய 25 வருடங்களுக்கு மேலாக பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அக்கட்சியின் கொள்கைகளை நிறைவேற்றப் பாடுபட்டு வந்தவர். இன்று தனது வீட்டின் அருகிலேயே கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தனிப்பட்ட பகையானாலும், அரசியல் காழ்ப்புணர்வானாலும் இது போன்ற வன்முறைகள் தீர்வை தராது. இப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். கொலையில் ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளை கைது செய்து, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஆம்ஸ்ட்ராங் படுகொலை: சம்பந்தப்பட்டவர்கள் இரவோடு இரவாக கைது - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details