திருச்சி:திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் தொடக்கப் பள்ளியில் சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மகன், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், மாணவிகள் தங்கி படிக்கும் விடுதிக்கு அடிக்கடி சென்று, அவர்களுக்கு மருத்துவம் பார்ப்பது போல கடந்த 6 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு ரகசிய புகார் வந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்தும், அதற்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியை மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து காலை முதல் காவல் நிலையத்தில் வைத்து 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பத்திரிகையாளர்களுக்கு போலீசார் எந்த வித தகவலையும் தர மறுத்தனர். அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, இரவு 8.30 மணிக்குள் நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்துவதாக இருந்தது. இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர், தனக்கு இரத்த அழுத்தம் உள்ளது, சர்க்கரை நோய் உள்ளது, நெஞ்சு வலிக்கிறது என பல்வேறு காரணங்களைக் கூறி சோதனைகளை தாமதப்படுத்தினார்.