திருச்சி:பெண் போலீஸார் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததாகப் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது திருச்சியைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் இன்று (மே.08) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழக முதல்வர், தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசுத் துறையில் நடக்கும் ஊழல்கள் ஆகியவை குறித்து பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டுப் பேசி வந்தார்.
இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பிற அரசுத் துறையிலும் பணி புரியும் பெண்கள் மற்றும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறான கருத்தைத் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ காவலர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவை சைபர் கிரைம் போலீசார் பெண் போலீசாரை பற்றி அவதூறாகப் பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து தேனியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த போது, அவரது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்ததாகத் தேனி போலீசார், தனியாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்திருந்தனர். 2 வதாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சென்னை, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்கள் தெரிவித்ததற்காக, திருச்சி முசிறி உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் யாஸ்மீன் மேலும் ஒரு புகாரை அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார், சவுக்கு சங்கர் மீது, அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், பெண்களை இழிவுபடுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: "சவுக்கு சங்கருக்கு எலும்பு முறிவு?" - நீதிமன்றத்தில் சிறைத் துறை சிக்கும் என்கிறார் வழக்கறிஞர்! - Savukku Shankar Assault Allegation