தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக போடி பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சாலை மறியல் தேனி: குழந்தைகளின் படிப்பிற்காகப் பழங்கால வாழ்க்கையை விட்டு வெளியேறி 15 ஆண்டுகளுக்கு முன் இடம் பெயர்ந்து வந்த ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு, இன்று வரை அரசின் இலவச வீட்டு மனை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று (மார்.14) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேர்தலுக்கு முன்பாக தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், இந்த தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கரும்பாறை மற்றும் குறவன் குழி கிராமங்கள். இந்த இரண்டு கிராமங்களிலும் 37 ஆதிவாசி பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர்.
அரசு வழங்கும் எந்த சலுகைகளும் இவர்களுக்குச் சென்றடையாததாலும், குழந்தைகளின் படிப்பும் கேள்விக்குறியானதாலும், 15 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்து, சோத்துப்பாறை அணைப் பகுதியில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் அரசு இலவச வீட்டு மனைகளை ஒதுக்கித் தரக்கோரி, கடந்த 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரை அரசின் இலவச வீட்டு மனை வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த ஆதிவாசி பழங்குடியின மக்கள், இன்று சோத்துப்பாறை அணைப் பகுதிக்கு மேல் உள்ள வனத்துறை சோதனைச் சாவடி முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அகமலை, கண்ணகரை உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் போக முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் இப்பிரச்சனை குறித்து ஆதிவாசி பழங்குடி இன மக்கள் கூறுகையில், “எங்கள் சமுதாயத்திற்கு இதுவரை படிப்பறிவு கிடைக்காத நிலையில், எங்கள் குழந்தைகளாவது கல்வி கற்று மற்ற சமுதாய மக்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பழங்கால வாழ்க்கையை விட்டு வெளியே வந்தோம். இருந்தபோதிலும், இதுவரையில் அரசாங்கம் எங்களுக்கு எந்த உதவிகளும் செய்யாத நிலையில், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது”, என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தங்களுக்கு அரசின் இலவச வீட்டுமனையை வழங்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் தேர்தலில் வாக்களிப்பதைப் புறக்கணிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ.. அரியவகை மூலிகைகள் உட்பட 300 ஏக்கர் வனப்பகுதி சேதம்!