கோயம்புத்தூர்:கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, முத்துசாமி, சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கோவை தொகுதியை விட்டு தந்த கூட்டணி கட்சிக்கு நன்றி.
கோவை ஒரு முக்கியமான தொகுதி, இங்கு மாபெரும் வெற்றி பெற வேண்டும். வீடு வீடாக மக்களைச் சந்திப்பது தான் வெற்றியை தேடி தரும். செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்துள்ளார். இன்றும் அவர் கோவையைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். கோவையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது.
உங்களை மீறி நாடாளுமன்றத்தில் அண்ணாமலை எதுவும் செய்துவிட முடியாது. பயம் இருப்பதால் தான் பாஜகவினர் கோவையைச் சுற்றி வருகிறார்கள். அவர்கள் ஆயிரம் கூட்டம் நடத்தினாலும், 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். மத்தியில் நமது கூட்டணி அரசு அமைந்தால், நமக்கான நிறைய திட்டங்களை பெற முடியும். மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்”, என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு மின்னிக் கொண்டிருக்கும் வேளையில், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சியைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வொரு இந்திய மக்களிடம் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணி மகத்தான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை, இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த கூட்டணி கட்சிகளும் முயற்சி மேற்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற எண்ணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக்கு வழி சேர்க்கும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியா கூட்டணியில் வேட்பாளர் மகத்தான வெற்றியைத் தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்திருக்கிறது.
எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்பார், அப்படிப்பட்ட ஒரு வளர்ச்சியை தமிழக மக்கள் கண்டிருக்கிறார்கள்.
எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில், திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார். பாஜகவின் தேசியத் தலைவரே இங்கே போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார்கள். இதனை சாதாரண ஒரு தேர்தலாக பார்க்கக்கூடாது. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிக்கிறதே. தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.