தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வைகை எக்ஸ்பிரஸ் ரயில் படிக்கட்டில் பயணித்த நபர் தவறி விழுந்து உயிரிழப்பு! - Vaigai Express Death

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தது குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்து உயிரிழந்த பாலமுருகன்
ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்து உயிரிழந்த பாலமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 1:46 PM IST

சென்னை: சென்னையில் வைகை விரைவு ரயில் படிக்கட்டில் அமர்ந்தவாறு காலை நீட்டி பயணம் செய்த இளைஞர், சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் மோதி, தவறி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த 24 வயதான பாலமுருகன், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணம் செய்துள்ளார். இந்த ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தைக் கடந்தபோது, இளைஞரின் கால் நடைமேடையில் மோதி கீழே விழுந்தார். அப்போது நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டு, வேகமாக சென்ற ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக பணியில் இருந்த மாம்பலம் ரயில்வே காவல் துறையினர், பாலமுருகனின் சடலத்தை மீட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பாலமுருகன் ரயிலில் இருந்து தவறி விழும் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தோழியுடன் தகராறு... ரயிலில் விழுந்து உயிரை மாய்த்த என்ஜினீயரிங் மாணவர்:

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்மித்ரன் (20). அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி 4ஆம் ஆண்டு பி.டெக்., படித்து வந்தார். இந்நிலையில், அதே பல்கலைக்கழகத்தில் மூத்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு பாராட்டி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தவெக கொடி விவகாரம்.. BSP மீண்டும் கடிதம்.. மாநில பொதுச் செயலாளர் கருப்பையா!

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, அண்ணா பல்கலை விடுதியில் தங்கியிருந்த மதன்மித்ரனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது புகைப்படம் அனைத்து காவல் நிலையத்துக்கும் அனுப்பபட்டது. இந்நிலையில், கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடந்த இளைஞரின் சடலத்தை மாம்பலம் ரயில்வே போலீசார் மீட்டு, விசாரணை நடத்தினர்.

இதில் சடலமாக மீட்கப்பட்டது மதன்மித்ரன் என்பது தெரியவந்தது. மேலும், காவல் துறையினர் கடிதம் ஒன்றையும் மீட்டனர். அதில், மூத்த மாணவியுடன் நட்பாக பழகி வந்ததும், மனக்கசப்பு காரணமாக அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து, அவரது சடலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details