நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சீசன் களை கட்டிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தற்போது தீபாவளி மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பயணிகள் நீலகிரியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைன் பாரஸ்ட் மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, அவலாஞ்சி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்கின்றனர்.
மேலும் குன்னூர் டால்பின் நோஸ், லேம் ஸ்ராக் ஆகிய இடங்களில் இயற்கை காட்சியை ரசிக்கவும், மிதந்து வரும் மேக கூட்டங்களும் இதமான கால நிலையை அனுபவிக்கச் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். மேலும் இங்குள்ள தேயிலை தோட்டங்கள் நடுவே நின்று புகைப்படம் எடுத்தும் அரிய வகை வனவிலங்குகள் ஆதிவாசிகள் குடியிருப்பு கேத்தரின் நீர்வீழ்ச்சி போன்றவற்றை கண்டு மகிழ்கின்றனர்.