சென்னை:விளையாட்டுப் பிரிவின் கீழ் சேர்வதற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எனவே, விளையாட்டு வீரர்கள் நேரில் கலந்துக் கொண்டு சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் 2024 - 25ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஜூலை 31 ந் தேதி முதல் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பெறப்படுகின்றன. மாணவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். மேலும் எஸ்சி, எஸ்சி ஏ மற்றும் எஸ்டி வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-24ஆம் கல்வி ஆண்டில் 36 அரசு மருத்துவக் கல்லூரியில் 5 ஆயிரத்து 550 இடங்களும், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 400 இடங்களும் மூன்று தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளில் 450 இடங்கள் என 9 ஆயிரத்து 50 இடங்களில் எம்பிபிஎஸ் படிப்பிலும், பிடிஎஸ் படிப்பில் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் 1,950 இடங்கள் என மொத்தமாக 2 ஆயிரத்து 200 இடங்களும் உள்ளன.
இந்த இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 38 இடங்களும் நிரப்பப்படும். இதற்கான கலந்தாய்வு தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினால் நடத்தப்படும். மீதம் உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ மாணவர் சேர்க்கை குழு மூலம் ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.