சென்னை: சென்னை மாநகரில் நேற்று முதல் இன்று வரை நடந்த முக்கிய குற்ற சம்பவங்களை சுருக்கமாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
ஆலந்தூர் நீதிமன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை தாக்கிய திருநங்கை உட்பட இரண்டு பேர் கைது.
சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள ரவுண்டானாவில் நேற்று அதிகாலை பரங்கிமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த திருநங்கை உட்பட இரண்டு பேரை காவலர் சிரஞ்சீவி (33) தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை உட்பட இரண்டு பேர் சிரஞ்சீவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு அவரை கீழே தள்ளி அடிக்க முற்பட்டனர். இதை பார்த்த சக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி இருவரையும் காவல் நிலையத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், மகாராஷ்டிராவை சேர்ந்த திருநங்கை ஆயுஸ் மிஸ்ரா(27), உத்திர பிரதேசத்தை சேர்ந்த சிவேந்திர பால் சிங்(35) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் நங்கநல்லூரில் வீடு வாடகை எடுத்து தங்கி இருந்ததாகவும், அதீத மது போதையில் இருந்ததால் போலீசாரை கீழே தள்ளி அடிக்க முயற்சித்தோம் என்று தெரிவித்தனர்.
இதில் இரண்டு கைகள், முதுகில் காயமடைந்த காவலர் சிரஞ்சீவி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், இச்சம்பவம் குறித்து பரங்கிமலை போலீசார் திருநங்கை மற்றும் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பெண் தயாரிப்பாளரை வாட்ஸ் அப் குழுவில் அவதூறுவாக பேசிய நபர் கைது
சென்னை வி.ஆர். மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இருந்து வருபவர் ராஜேஸ்வரி (54). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வி.ஆர். மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். தற்போது இரண்டு படங்களை ராஜேஸ்வரி தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராஜேஸ்வரி தமிழ் பட முதலாளிகள் என்ற பெயரில் வாட்சப் குழுவில் இணைந்துள்ளார். அந்த குழுவில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஈஸ்வர் (47) என்ற நபரும் இருந்துள்ளார். இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த வாட்சப் குழுவில் ஈஸ்வர் ராஜேஸ்வரியை பற்றி அவதூறாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தன்னைப் பற்றி அவதூறாக வாட்ஸ் அப் குழுக்களில் பேசி வரும் ஈஸ்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராணி விசாரணை செய்ததில் வாட்சப் குழுவில் ஈஸ்வர் அவதூறாக பேசியது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து திண்டுக்கல் பகுதிக்குச் சென்ற தனிபடை போலீசார் ஈஸ்வரை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இலங்கை துணை தூதரக ஆணையரின் வாட்சப் ஹேக் செய்யப்பட்டதாக புகார்
சென்னை, நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் இலங்கை துணைத் தூதரகம் உள்ளது. அங்கு துணை தூதரக ஆணையராக துரைசாமி வெங்கடேஸ்வரன் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 7 மணி முதல் இவரது வாட்சப் செயலி முடங்கியுள்ளது. நேற்று காலை 10 மணிக்கு செயலி மீண்டும் தானாகவே செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், தனது வாட்சப் செயலி ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பாக விசாரணை நடத்துமாறும் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்