தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்".. அமைச்சர் சிவசங்கர் தகவல்! - SS SIvasankar - SS SIVASANKAR

Minister Sivasankar: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் தமிழகத்தில் இயங்கக்கூடாது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 13, 2024, 3:51 PM IST

Updated : Jun 13, 2024, 7:43 PM IST

சென்னை:சென்னை பல்லவன் நிலத்தில் போக்குவரத்து கழகத்தில் திரவப் பேருந்துகள் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் துவங்கி வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "தமிழகத்தில் 20 ஆயிரம் டீசல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அமைச்சர் சிவசங்கர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் 1.76 கோடி பேர் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து துறை செலவினங்களில் 27 சதவீதம் எரிபொருளுக்காக செலவிடப்படுகிறது. இந்நிலையில், செலவினங்களைக் குறைக்கும் வகையிலும், காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் 16 CNG மற்றப் 4 LNG பேருந்துகள் சோதனை முறையில் இயக்கத்தை துவக்கி வைத்துள்ளோம்.

வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் படிப்படியாக டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்த போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்தாண்டு 2,000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது 1,000 புதிய பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயக்கப்படுகின்றன.

7,500 புதிய பேருந்துகள்:கிராமப் பகுதிகளில் புதிதாக இள நீல நிறப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடப்பாண்டு கூடுதலாக 3,000 பேருந்துகளும், ஜெர்மன் நிதி உதவியுடன் கூடுதல் பேருந்துகள் என 7,500 புதிய பேருந்துகளை மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர போக்குவரத்துத் துறை முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.

மேலும், பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பொதுமக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் கூடுதல் பயணிகள் வருகை எதிரொலியின் காரணமாக பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் காத்திருப்பதை பட்டியலிடுபவர்கள், எத்தனை பேர் அன்றைய தினம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக பயணித்தார்கள் என்பதை கருத்தில் கொள்வதில்லை.

அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கபடாத நிலையில், சில பணிமனைகளில் பேருந்துகள் காலாவதியான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. அந்தப் பேருந்துகளை மாற்றம் செய்வதற்குத்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் ஒருவர் கூட மீதமின்றி பயணிகளை அவரவர் ஊருக்கு வழியனுப்பும் பணிகளில் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

வெளி மாநிலப் பேருந்து:தொடர்ந்து பேசிய அவர், “பள்ளியில் மாணவர் சேர்க்கை முடிந்த பிறகு மாணவர்களுக்கு இலவசப் பயணச்சீட்டு கொடுக்கும் பணிகள் நடைபெறும். வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட ஆமினி பேருந்துகள் நாளை முதல் இயங்கக்கூடாது. ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது.

மேலும், கால அவகாசம் நீட்டிப்பது குறித்து போக்குவரத்து ஆணையரிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முறையீடு செய்தால், அவர் அது குறித்து முடிவு எடுப்பார். சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். வருகின்ற கூட்டத்தொடரில் போக்குவரத்து துறையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது.

தற்பொழுது தற்காலிகப் பணியாளர்களை பணிக்கு எடுத்து இருக்கிறோம். நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட உடன் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதேபோல, இந்த ஆண்டு இறுதிக்குள் 500 எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். அதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது. நிரந்தரப் பணியாளர்கள் எடுக்கும் பணிகள் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு மூன்று மாதங்கள் கழித்து, அதற்கான பணிகள் தொடங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:சேலம் விபத்தில் 5 பேர் மரணத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் கைது!

Last Updated : Jun 13, 2024, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details