தமிழ்நாடு

tamil nadu

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு: சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு.. 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வர அறிவுரை - tnpsc group 2 exam

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 5:04 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி(கோப்புப் படம்)
டிஎன்பிஎஸ்சி(கோப்புப் படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம்(TNPSC) குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது. வணிக வரித்துறை கூடுதல் அலுவலர், உதவிப் பதிவாளர், சென்னை காவல் சிறப்பு பிரிவு அதிகாரி, கூட்டுறவு ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை கணக்கு ஆய்வாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 2,327 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 7,93,966 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப்-2 தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திற்கும் ஒருவர் ஆட்சியர் மூலம் நியமனம் செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார். தேர்வு தொடர்பான பணிகளை வீடியோ பதிவு செய்யவும் டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2,763 தேர்வு மையங்களில் இறுதிகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக தலைநகர் சென்னையில் மட்டும் 251 மையங்களில் 75,185 பேர் தேர்வு எழுதவுள்ளனர்.

சிறப்பு பேருந்துகள், தடையில்லா மின்சாரம்: தேர்வர்கள் வந்து செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்ய சம்பந்தப்பட்ட துறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பாதுகாப்புக்காக காவல்துறை, தடையில்லா மின்சார வசதிக்காக மின்சாரத்துறைக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்களுக்கு அறிவுரை : விண்ணப்பதாரர்கள் தேர்வு நடைபெறும் நாளன்று முற்பகல் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே சென்று விடுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வர்களுக்கான அறிவுரை: தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/English/viewhallticket.aspx என்ற லிங்க் மூலம் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும். செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துவரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு பெரும்பாலான பள்ளிகளில் தேர்வு மைய அமைக்கப்பட்டுள்ளதால் இன்று(சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details