கோயம்புத்தூர்:தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கோவை ரோட்டரி கிளப் சார்பில், வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மலர்க் கண்காட்சியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதா லட்சுமி துவக்கி வைத்தார். இன்று முதல் 25ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு இக்கண்காட்சி நடைபெறுகிறது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் மலர்க் கண்காட்சியில் வெளிநாடுகளிலிருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சி படுத்தப்பட்டுள்ளது. மலர்கள் மட்டுமின்றி பாரம்பரியத்தை பறைசாற்றும் சிறுதானியங்கள் கொண்டு பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தக் கண்காட்சியில் கேரட் உண்ணும் முயல், கேரம் போர்டு, செஸ் போர்டு, மறைந்த SPB புகைப்படத்துடன் இசைக்கருவிகள், யானை, சந்திரயான் போன்றவை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், நெதர்லாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட துலிப் மலர்களின் கார்டன், போன்சாய் கார்டன், ஆக்சிஜன் பார்க், அடர்நடவு முறையில் மியாவாக்கி கார்டன் என, பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி அனைத்துத் தரப்பு மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் பெரியவர்களுக்கு நுழைவு கட்டணமாக நூறு ரூபாயும், குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது என பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதா தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில், பொது மக்களின் வசதிக்காக ஆங்காங்கே இலவச குடிநீர் வசதி, மொபைல் டாய்லெட் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலர்க் கண்காட்சியில் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதால் பொதுமக்கள் அவர்களிடம் பேச நல்ல வாய்ப்பாக இருக்கும். நாள்தோறும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளுக்காகப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
கண்காட்சி குறித்து பள்ளி மாணவி காவியா கூறுகையில், “கண்காட்சியைப் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. படிப்பு, பரீட்சை என மன அழுத்தத்திலிருந்து வெளி வர உதவுகிறது” எனத் தெரிவித்தார். கண்காட்சிக்கு வருவதால் வீட்டில் என்ன செடிகள் வளர்க்கலாம் போன்ற யோசனைகள் கிடைக்கின்றன. இது வரை பார்த்திடாத நிறங்களில் செடிகள் இருக்கிறது எனவும் பார்ப்பதற்கு மிகவும் மனநிறைவாக இருக்கிறது எனப் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற தேர்தல் 2024: கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்ததும்.. செய்யத் தவறியதும்..!