சென்னை:மின்சார பேருந்துகள் பயன்பாடு குறித்து தமிழக அரசு இன்று செய்திக்குறிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 'பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்யும் விதமாகவும், நகரின் கார்பன் தடயத்தை கணிசமாகக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை அடைவது, புகையில்லா மற்றும் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாகவும், நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் பேருந்துகளை மொத்த விலை ஒப்பந்த மாதிரி (Gross Cost Contract) முறையில் இயக்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த ஒப்பந்தத்தில் OHM Global Mobility Private Ltd., (Subsidiary of Ashok Leyland Ltd & SWITCH Mobility Automotive Limited), EVEY Trans Private Ltd (Subsidiary Olectra Green Tech Ltd.,) மற்றும் Aeroeagle Automobiles Private Ltd., ஆகிய மூன்று நிறுவனங்கள் கலந்து கொண்டனர். தற்போது, மேற்படி ஒப்பந்தமானது முடிவுக்கு வந்து OHM Global Mobility Private Ltd., (Subsidiary of Ashok Leyland Ltd & SWITCH Mobility Automotive Limited) நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மின்சாரப் பேருந்தானது SWITCH Mobility Automotive Limited நிறுவனத்தின் மூலம் தயார் செய்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் ஏப்ரல்-2025 முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் .சிவசங்கர் தெரிவித்தார்கள்.
நவீன வசதிகளுடன் கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் ஒருமுறை மின்னேற்றம் (Charging) செய்தால் சராசரியாக 180 கி.மீ. இயக்க இயலும். நாளொன்றுக்கு சராசரியாக 200 கி.மீ. வரை இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குளிர்சாதன வசதியில்லாத 400 மின்சாரப் பேருந்துகளும், குளிர்சாதன வசதியுடன் கூடிய 100 மின்சாரப் பேருந்துகள் என மொத்தம் 500 மின்சாரப் பேருந்துகள் பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-1, பூவிருந்தவல்லி, வியாசர்பாடி மற்றும் பெரம்பூர்-2 ஆகிய 5 பணிமனைகளிலிருந்து இயக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளையும் இணைத்திடும் வகையில், நவீன வசதிகளுடன்கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.