தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

TN Pollution Control Board: அம்மோனியம் கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை, இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

tn pollution control board said that Coromandel cannot be allowed to operate in Tamil Nadu
கோரமண்டல் நிறுவனத்தை இனி தமிழகத்தில் செயல்பட அனுமதிக்க முடியாது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 6, 2024, 2:10 PM IST

Updated : Feb 7, 2024, 2:21 PM IST

சென்னை:எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து, கடந்த ஆண்டு 2023 டிச.26ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணியளவில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் கோரமண்டல் தொழிற்சாலைக்கு அருகில் இருந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.

இதையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக வாயுக்கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டாலும், ஆலையைத் தற்காலிகமாக மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபாடி அமர்வு, "தவறு செய்தது அரசாக இருந்தாலும், தனியார் நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தது. மேலும் கடல்சார் வாரியம், மீன்வளத்துறை, தொழில் பாதுகாப்புத்துறை இணைந்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், வாயுக்கசிவு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், விபத்துக்கான காரணம் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அம்மோனியம் கசிவால் பல்லுயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆலையின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் கடல்சார் வாரியம் மற்றும் தொழில் பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தீர்ப்பாயம், அறிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக் கூறி, மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம்:இந்த வழக்கு இன்று (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், "அம்மோனியம் கசிவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஐ.டி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.பி.சி.எல் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

குழு அறிவுறுத்தலின் படி, 20 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளது. குழு அறிக்கையில், கடந்த 25 வருடங்களாக ஒரே குழாயில் அம்மோனியம் எடுத்துச் சென்றதே கசிவுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அதிகமான அழுத்தம் காரணமாக, அம்மோனியம் கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, கோரமண்டல் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. வேறு எந்த அம்மோனிய நிறுவனங்களும் எண்ணூரில் இல்லாதபோது, கோரமண்டல் நிறுவனம் விபத்துக்கான பொறுப்பை ஏற்க மறுக்கிறது.

கோரமண்டல் நிறுவனம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே விபத்துக்கு காரணம். இந்நிறுவனம் கணக்கில் வராத 67.6 டன் அம்மோனியத்தை சட்டவிரோதமாக சேர்த்து வைத்திருந்தது. வெள்ள பாதிப்புக்குப் பிறகு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் தவறிவிட்டது.

நிறுவனத்தின் உள்ளே மட்டும் தானியங்கி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. குழாய் அமைக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளில் தானியங்கி கருவிகள் பொருத்தப்படவில்லை. அம்மோனியம் கசிவுக்கு காரணமான கோரமண்டல் போன்ற விதிகளை மதிக்காத நிறுவனங்களை, தமிழகத்தில் இனி செயல்பட அனுமதிக்க முடியாது" என தெரிவிக்கப்பட்டது.

கோரமண்டல் நிறுவனம்:கோரமண்டல் நிறுவனத்தின் சார்பில், "சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளது. கடல் பகுதியில் மட்டுமே குழாய்கள் வெளியில் உள்ளது. வேறு எங்கும் கசிவு பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நிறுவனத்தில், இது போல விபத்துகள் ஏற்பட்டது இல்லை.

பாதுகாப்பு நடவடிக்கையாக 35 தானியங்கி கருவிகள் நிறுவனத்தின் உள்ளே அமைக்கப்பட்டு உள்ளது. 150 ஒலி எழுப்பான்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “அம்மோனியம் சேமிப்புக் கிடங்கு காலியாக இருந்ததா? அதனால், அதிக அழுத்தம் கொடுக்க நேர்ந்ததா என தெரிவிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை விதிகளின் படி நிறுவனம் செயல்படவில்லையா? விபத்து ஏற்படும்போது தானாக நிறுத்தும் வசதி செயல்பாட்டில் இருந்ததா? நிறுவனத்துக்கு வெளியில் தானியங்கி செயலிழப்பு கருவி இல்லையா உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் கோரமண்டல் நிறுவனம் தனது விளக்கத்தை தனிப்பட்ட முறையில் வழங்க வேண்டும்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைக்கு எதிராக விளக்க அறிக்கை அளிக்கத் தேவையில்லை. விபத்து காலத்தின்போது தானாக நிறுத்தும் தானியங்கி கருவி இயங்கியதா அல்லது செயல்படவில்லையா என கோரமண்டல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

Last Updated : Feb 7, 2024, 2:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details