சென்னை:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.00 மணி முதல் ஒரே கட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் ஆர்வமாக காலை முதல் தேர்தல் மையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடியில் காலை 8.33 மணியளவில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்து வாக்களித்தார். இதேபோல, முன்னதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரும் எடப்பாடி கே.பழனிசாமியும் சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 8.00 மணியளவில் வாக்காளித்தார்.
இதேபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரைப் பகுதியில் உள்ள பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார். அப்போது பேசிய ஓபிஎஸ், 'ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எங்கே இருக்கிறார் என தெரியவில்லை' என்றும் தெரிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், சென்னை கோயம்பேட்டில் வாக்களித்தார். இதேபோல, பாஜக மாநில தலைவரும் கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை, தனது சொந்த ஊரான அரவக்குறிச்சியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
தமிழக பாஜக தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான கே.அண்ணாமலை அரவக்குறிச்சியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது பேசிய அவர், 'கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜக பணம் கொடுத்ததாக கூறும் திமுக அதனை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்' என சவால் விடுத்துள்ளார்.
பாம்க நிறுவனத் தலைவர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் செளமியா ஆகியோர் அன்புமணி திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். இதேபோல, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள அங்கனூர் கிராமத்தில் திருமாவளவன் தனது வாக்கினை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளியில் செலுத்தினார்.
இதேபோல, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெறுவது உறுதி. என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். எங்களது அரசு எல்லா திட்டங்களை செயல்படுத்துவதற்கான அங்கீகாரமாகத்தான் மக்கள் அதிக அளவில் வாக்களித்து வருகின்றனர்' என்று தெரிவித்தார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி மிஷின் வீதியில் உள்ள வ.உ.சி பள்ளியில் 10.19 மணியளவில் தனது வாக்கினை செலுத்தினார். அதேநேரத்தில், புதுச்சேரி பாஜக வேட்பாளர் ஆ.நமச்சிவாயம், வி.மனவெளி அரசு தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 5/25-இல் வாக்களித்தார்.
இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: வேங்கைவயலில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை! - Lok Sabha Election 2024