சென்னை:இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை இந்தியா - இங்கிலாந்து இடையே காது கேளாதவர்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏழு போட்டிகள் கொண்ட தொடரில் 5 - 2 என்ற கணக்கில் இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்று கோப்பையை வென்றுள்ளது. இதில், இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் ஆகாஷ் மற்றும் சுதர்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றிருந்தனர்.
இதில் சாய் ஆகாஷ் இந்திய காது கேளாதோர் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர்கள் இருவரும் இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு பங்காற்றி உள்ளனர். 7 போட்டிகள் கொண்ட தொடரில் துணைக் கேப்டன் சாய் ஆகாஷ் 271 ரன்கள் குவித்துதொடர் நாயகன்விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் இன்று சென்னை திரும்பினர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இருவருக்கும் மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய காது கேளாதோர் அணியின் துணை கேப்டன் சாய் ஆகாஷ், “இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்பு அனைத்து போட்டிகளிலும் நன்றாக விளையாடி தேர்ச்சி பெற்றோம். நான் இந்திய அணையின் துணை கேப்டனாக உள்ளேன்.
சுதர்சன் இந்திய அணியின் ஆல்ரவுண்டராக உள்ளார். இதுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து உதவிய பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா - இங்கிலாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா 5 போட்டியில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்திய அணியினர் ஒற்றுமையாக விளையாடி வெற்றி பெற்றுள்ளோம்.
இங்கிலாந்து ஆடுகளத்தின் சூழ்நிலைகள் தெரியாததால் முதல் இரண்டு ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் பிறகு சிறப்பாக விளையாடி தொடர்ந்து 5 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது” என்றார். இதனைத் தொடர்ந்து இந்திய காது கேளாதோர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சுதர்சன் கூறுகையில், “இங்கிலாந்திடம் ஐந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.