புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது வேங்கைவயல் கிராமம். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மனிதக் கழிவு கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் குடிக்கும் நீரில் மனிதக் கழிவை கலந்த கொடூரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வேங்கைவயல் கொடூரம்! குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாதம் அவகாசம்! - VENGAIVAYAL ISSUE
வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் மேலும் 1 மாதம் அவகாசம் அளித்துள்ளது.
Published : Jan 23, 2025, 5:10 PM IST
வேங்கைவயல் கிராமத்தில் இந்த கொடூரம் அரங்கேறி 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், 330 பேரிடம் நேரடி சாட்சியங்களை பெற்றுள்ளனர். மேலும் 31 பேருக்கு டி.என்.ஏ பரிசோதனையும் 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையையும் அவர்கள் எடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தங்களுக்கு மேலும் ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மனுவை விசாரித்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.