ஹைதராபாத்:திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வரவு - செலவு கணக்குகளை ஏழுமலையான் சாமியிடம் சமர்ப்பிக்கும் பாரம்பரிய வைபவம் ஆனி மாத கடைசி நாளில் நடைபெறுவது வழக்கம். 'ஆனி வார ஆஸ்தானம்' எனப்படும் இந்த நிகழ்வின்போது தமிழ்நாடு அரசின் சார்பில் திருப்பதி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அளிப்பது வழக்கம். இந்த நிகழ்வுக்காக என்றே, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருப்பதிக்கு மங்கலப் பொருட்கள் பிரத்யேகமாக எடுத்து செல்லப்படும் நடைமுறையும் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஆனி வார ஆஸ்தானம், திருமமலை திருப்பதியில் இன்று நடைபெற்றது. இந்த வைபத்தில் தமிழகத்தில் இருந்து பங்கேற்க, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு , அறநிலையத் துறை ஆணையர் உள்ளிட்ட 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பத்து பேரும் மகா துவாரம் எனப்படும் ராஜகோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அதன்படியே அவர்கள் அனைவரும் கோயிலுக்குள் சென்றனர்.
அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த அறநிலையத் துறை இணை ஆணையர் மாரியப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்றார். அப்போது அவரை தேவஸ்தான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பத்து பேருக்கான தான் வைபவத்தில் பங்கேற்க அனுமதி எனக் கூறி. அவரை அதிகாரிகள் கோயில் நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தினர். இதனை கண்டு ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர் பாபு, இணை ஆணையரையும் கோயிலுக்குள் அனுமதிக்குமாறு தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.