தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவது தீவிர குற்றம்! வாகனங்களை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி! - MEDICAL WASTE CASE

மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவக் கழிவு, உயர் நீதிமன்ற மதுரை கிளை - கோப்புப்படம்
மருத்துவக் கழிவு, உயர் நீதிமன்ற மதுரை கிளை - கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2025, 4:32 PM IST

மதுரை :மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று மருத்துவக் கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்து ஏல நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சிபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

கடந்த வருடம் எனக்கு சொந்தமான வாகனம் மருத்துவ கழிவுகளை கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சளு மூடு ஊராட்சிக்கு உட்பட்ட பாலுக் குழி என்ற கிராமத்தில் கொட்டியதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் எனது வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

எனவே பறிமுதல் செய்யப்பட்ட எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். இதனை விசாரணை செய்த கீழமை நீதிமன்றம் எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க மறுத்து என் மனுவை தள்ளுபடி செய்தது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே விசாரண நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து எனது வாகனத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி மனுதாரர் வாகனம் விதிமுறைகளை மீறி கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளது. இதை அனுமதிக்க முடியாது. இது போன்ற வாகனங்களை திரும்ப ஒப்படைப்பதால் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த முடியாது. மேலும் உள்ளாட்சி சட்ட விதிகளின்படி இந்த வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் நடத்துவ முழு அதிகாரம் உள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்தார் நீதிபதி புகழேந்தி. அப்போது அவர், மருத்துவக் கழிவுகளை கையாள்வதற்கு பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. குறிப்பாக 75 கிலோ மீட்டர் தாண்டி மருத்துவக் கழிவுகள் கொண்டு போகக் கூடாது என்றும் மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என பல்வேறு சட்ட விதிகள் உள்ளன. ஆனால் இதனை எதையும் பின்பற்றாமல் தமிழகத்திற்குள் கொண்டு வந்து மருத்துவக் கழிவுகளை கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தீவிரமான குற்ற செயலாகும் என்று தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சி சட்ட விதிகள்படி மருத்துவ கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி பண்ணுவதற்கான சட்ட விதிகள் உள்ளன. அதை செய்வதில்லை. எனவே இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர், காவல்துறை தலைவர், உள்துறை செயலாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளாட்சித் துறை செயலர் ஆகியோரை தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, இது போன்று விதிமுறை மீறி மருத்துவ கழிவுகளை கொண்டு வரும் வாகனங்களை ஜப்தி செய்வது குறித்து உரிய செயல்முறை வழிகாட்டுதளை அந்தந்த துறையினருக்கு செயலாளர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையிட்டார். மேலும் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்த வாகனத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி புகழேந்தி தீர்ப்பளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details