தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; “போலீசாருக்கு எதிராக நடவடிக்கை கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல” - அரசுத் தரப்பு! - Thoothukudi firing Case - THOOTHUKUDI FIRING CASE

Thoothukudi Firing: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மனுதாரர் எழுப்பிய இதர கோரிக்கைகள் தொடர்பாக பதில்மனுத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படங்கள்
கோப்புப்படங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 9:47 PM IST

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த சம்பவத்துக்கு காரணமான 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்பட வருவாய்த் துறையினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இழப்பீட்டை அதிகரித்து வழங்கவும் பரிந்துரைத்திருந்தது.

இவ்வாறான ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு, அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மட்டும் எடுப்பது எனவும், ஏற்கனவே வழங்கப்பட்ட தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடே போதுமானது எனவும் கூறி, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இதனையடுத்து, இந்த அரசாணையை எதிர்த்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 17 வயது இளம்பெண் ஸ்னோலின் என்பவரின் தாய் வனிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை அடிப்படையில், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மீது கொலை வழக்கு பதியவும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அரசு, யார் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரிவிக்கவில்லை எனவும், குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து பதில் மனுவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், “ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் காவல்துறையினர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல” எனவும், குற்ற நடவடிக்கை தொடர்பாக மட்டுமே பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மனுவில் எழுப்பப்பட்ட மற்ற கோரிக்கைகள் தொடர்பாக கூடுதல் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; ஜூன் 7-க்குள் பதில்மனு தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details