சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மின்சாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மின்சாரத்துறை புதிய அறிவிப்புகள் :
- ரூ.200 கோடி மதிப்பீட்டில் அதிக மின்சுமை மற்றும் குறைந்த மின்னழுத்தத்தை சரிசெய்ய தமிழ்நாடு முழுவதும் புதிய கூடுதலாக விநியோக மின் மாற்றிகளை நிறுவுதல்.
- தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதை வடிவங்களாக மாற்றி அமைத்தல்.
- ரூ.211 கோடி மதிப்பீட்டில் 2 புதிய துணை மின் நிலையங்கள் திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் நிறுவுதல்.
- ரூ.217 கோடி மதிப்பீட்டில் 19 திறன் மின்மாற்றிகளை ( Power transformers ) மேம்படுத்துதல்.
- தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறைகளில் விரிவான எரிசக்தி திறன் மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்துதல்.
- பசுமை எரிசக்தி ஆதாரங்களைக் கொண்டு தனியார் மூலம் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல்.
- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சூரிய சக்தி மேற்கூரை நிறுவு திறனை கண்டறிய இணைய வழி மென்பொருள் உருவாக்குதல்.
- காற்றாலை மற்றும் சூரிய எரிசக்தியுடன் இணைந்த (Hybrid) மின் உற்பத்தி நிலையங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.
- மின் கடத்தல் வழித்தடங்களின் சுமை ஏற்று திறன் விதிமுறைகள் திருத்தம் செய்தல்.
- நீரோற்று புனல் மின் திட்டங்களுக்கான புதிய கொள்கை வகுக்கப்படும்.
- ரூ.1 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக களப்பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக மின் கட்டமைப்புகளில் மின்சாரம் உள்ளதா என கண்டறியும் எச்சரிக்கை உணரி சாதனங்கள் வழங்குதல்.
- மின் விநியோகத்தின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தி விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மின்கம்பிகளை மின்காப்பு செய்திட சிலிகான் ஓவர்ஹெட் லைன் இன்சுலேஷன் ஸ்லீவ்ஸ் (லாக்கிங் டைப்) நிறுவும் பணிகளை மேற்கொள்ளுதல்.
- ரூ.20 கோடி மதிப்பீட்டில் உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின் கம்பங்களின் மின் காப்பு பணிகளை மேற்கொள்ளுதல்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதின் ஒரு பகுதியாக ரூ.75 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள்.
- ரூ 6.50 கோடி மதிப்பீட்டில் யானை வழித்தடங்களில் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க அடர்ந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளின் தாழ்வழுத்தப் பகுதியில் Moulded Case Circuit Breaker நிறுவப்படும்.
- ரூ 4.8 கோடி மதிப்பீட்டில் 500 பட்டயப் பொறியாளர்களுக்கு ஒரு வருட கால தொழில் பழகுநர் பயிற்சி வழங்குதல்.
- ரூ.1.5 கோடி செலவில் பணியாளர்களின் தொழில்நுட்பம் மற்றும் ஆளுமை திறன்களை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படும்.
- ரூ.65 லட்சம் மதிப்பீட்டின் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் அலகு 4ன் கொதிகலனில் 8 எண்ணிக்கை செறிவூட்டப்பட்ட நிலக்கரி எரிப்பான்களை நிறுவுதல்.
- ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட CAAQMS நிலையத்தை தரவு பதிவேற்ற வசதியுடன் நிறுவுதல்.
அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி : அரசு உயர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் அலுவலர்கள் பணியில் சேரும் பொழுது கொடுக்கப்படும் பயிற்சியைத் தவிர பணியிடைப் பயிற்சிகள் தற்போது வழங்கப்படுவதில்லை. அரசின் சேவைகளை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்க்கும் அலுவலர்கள், மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தங்களது செயல் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது.
பல்வேறு துறைகளில் இணை இயக்குநர் நிலையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு உயர் அலுவலர்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், வழக்கு மேலாண்மை போன்ற பொருண்மைகளில் நாட்டிலேயே தலைசிறந்த பணியிடைப் நிறுவனங்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்படும். இந்நிதியாண்டில் இதற்கென ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும்.
தொகுதி-1 அலுவலர்களுக்கான பொதுவான அடிப்படை பயிற்சித் திட்டம் :தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான தொகுதி-1 பணிகளுக்கான தேர்வில் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரி), கூட்டுறவுச் சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 95 அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.