சென்னை:தமிழ்நாடு அரசின் களஞ்சியம் செயலியில் தொழில்நுட்ப இடர்பாடுகளை வைத்துக்கொண்டு, பணியாளர்களை தீபாவளி முன்பணம் பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த வகையிலும் நியாயமானதாகத் தெரியவில்லை எனவும், அரசு ஊழியர்கள் பண்டிகை முன்பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் நிதித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம், பண்டிகைக்கு ஒருமாதம் முன்பாக வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கருவூல கணக்குத்துறை ஆணையரின் உத்தரவின் அடிப்படையில், அனைத்து பணியாளர்களும் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே பண்டிகை முன்பணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், களஞ்சியம் செயலியில் பண்டிகை முன்பணம் வேண்டி விண்ணப்பத்தினை அக்டோபர் 1ஆம் தேதி முதல் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில், கடந்த நான்கு நாட்களாக களஞ்சியம் செயலி செயல்படாமல் உள்ளது. இதனால் தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கப்படுவதில் தெளிவற்ற நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி பண்டிகை சிரமத்தை தவிர்க்க பகுதிநேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்குக - தமிழக அரசுக்கு கோரிக்கை
அனைத்து நிலை பணியாளர்களாலும் களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பிக்க இயலுமா? என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. மேலும், 90% பணியாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பண்டிகை முன்பணம் விண்ணப்பிக்கும் சூழல் உள்ளது. இத்தகைய சூழலில், களஞ்சியம் செயலி மூலமாக விண்ணப்பித்தால் மட்டுமே, பண்டிகை முன்பணம் பெற இயலும் என்பது, ஏற்கனவே காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினாலும், சிபிஎஸ் திட்டத்தில் எந்தவித முன்பணமும் பெற இயலாததாலும் பணியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
களஞ்சியம் செயலி மூலமாக பண்டிகை முன்பணம் பெறும் நடைமுறையினை இதற்கு முன்னர் கொண்டாடப்பட்ட பண்டிகைகளின்போது நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தால், அதில் ஏற்படும் தொழில்நுட்ப நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, சீரான முறையில் தீபாவளி பண்டிகை முன்பணம் பெறுவதை எளிமைப்படுத்தி இருக்கலாம். ஆனால், அதைவிடுத்து தற்போது தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்கும்போது, களஞ்சியம் செயலி மூலமாக முன்னோட்டம் காண்பது என்பது சரியான நடைமுறையாகத் தெரியவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள IFHRMS மென்பொருள் பயன்பாட்டிற்கு வந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் சர்வர் பிரச்னை, கடந்த 4 நாட்களாக செயல்படாத களஞ்சியம் செயலி போன்ற தொழில்நுட்ப பிரச்னைகள் எப்போதுதான் முழுமையாகத் தீர்க்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்நாள்வரை IFHRMS மென்பொருளை நிர்வகிக்கும் விப்ரோ நிறுவனம், தொழில்நுட்ப பிரச்னைகளை முனைப்புடன் எதிர்கொண்டு, விரைந்து தீர்வு கண்டு, எதிர்காலத்தில் நிகழா வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா என்பதும் கேள்விக்குறியே.
இவ்வாறாக தொழில்நுட்ப இடர்பாடுகளை வைத்துக்கொண்டு பணியாளர்களை தீபாவளி முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பத்தினை களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த வகையிலும் நியாயமானதாகத் தெரியவில்லை. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் பெறுவதில் தற்போது ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, பணியாளர்களுக்கு தீபாவளி முன்பணம் விரைந்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்