சென்னை:தமிழக அரசுக்காக பணியாற்றி வரும் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பில்களை முறையாக வழங்கவில்லை எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டண நடைமுறைகளை தாமதமின்றி மேற்கொள்ள பொதுத்துறை செயலரை சிறப்பு செயலராக நியமித்து அரசு உத்தரவிட்டு இருந்தது.
அப்போது, கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 15 வரை அரசு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்து இருந்த 4 ஆயிரத்து 638 கட்டண பில்களில் 943 பில்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 8 பில்களுக்கான கட்டணங்கள் மட்டும் சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ஒரு சதவீத பில்களை கூட வழங்காமல் கடந்த 3 மாதங்களாக நிறுத்தி வைத்தது ஏன் என கேள்வி எழுப்பினர். பின்னர், இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த புதிய நடைமுறையில் வேறு ஏதேனும் இடர்பாடுகள் இருந்தால் அவற்றை ஆக்கப்பூர்வமான வகையில் சரி செய்வது குறித்தும் இந்த அறிக்கையில் விளக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.