தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீரிழிவு நோயாளிகளின் கால் இழப்பை தடுக்க 'பாதம் பாதுகாப்போம் திட்டம்' ..தமிழக அரசு அரசானை வெளியீடு! - PADHAM PADHUKAAPOM THITTAM

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மருத்துவக் கல்லூரி வரையில் நீரிழிவு நோயாளிகளின் பாத பாதிப்பை கண்டறிய ரூ. 26.62 கோடி செலவில் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Health Team

Published : Oct 29, 2024, 10:12 AM IST

சென்னை:பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில், நீரிழிவு நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வை பயணத்தில் 'பாதம் பாதுகாப்போம் திட்டம்' அரசின் ஒரு முன்னோடித் திட்டமாகும். இத்திட்டத்தினை அரசு மருத்துவமனைகளில் நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பாதம் பாதுகாப்போம் திட்டம் என்றால்?: இத்திட்டம் நீரிழிவு நோய் பாத பாதிப்புகளை தவிர்பதற்கும் நீரிழிவு பாத பாதிப்புகளுக்கான மருத்துவத்தின் மூலமாக, கால் இழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கு வழிவகை செய்கிறது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் நோய்களை தடுப்பதிலும் சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

மாநிலத்தின் முதன்மையான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் கட்டமைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாத மருத்துவ சேவைகளை 36 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மூலமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கால்களை இழக்க நேரிடும் அபாயம்:பத்து கோடிக்கும் அதிகமான நோயாளிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ள இந்தியாவில் 25 சதவிகிதத்தினர் பாத பாதிப்புகளால் அவதியுறுவதும், இவர்களில் 85 சதவீதத்தினர் கால்களை இழக்க நேரிடுவதும் ஒரு தேசிய பேரிடர் ஆகும். தமிழ்நாட்டில் 80 லட்சம் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீரிழிவு பாத பாதிப்புகள் ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிடில் ஆபத்தான பின்விளைவுகளும், கிருமி தொற்று மற்றும் கால்களை இழக்கும் அபாயமும் நேரிடுகிறது. 85 சதவிகித நீரிழிவு தொடர்பான கால் அகற்றல்கள் (Amputations) காலத்தே கண்டறியப்பட்ட நோய் அறிகுறிகள் மற்றும் இடையீட்டுகளின் மூலம் முற்றிலும் தவிர்க்கக்கூடியவை ஆகும்.

பெருகி வரும் இப்பிரச்சினையின் தீவிர தன்மையை கண்டறிந்து இதைக் களைவதற்கான முன்னெடுப்பாக பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகள் பாத பரிசோதனைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயித்து திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த 5 உடற்பயிற்சிகளை ஃபாலோ பண்ணுங்க!

கால் இழப்பு: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாத உணர்விழப்பு மற்றும் ரத்த நாள அடைப்புகளை கண்டறிந்து மருத்துவ நெறிமுறைகள் அடிப்படையிலான ஆரம்ப நிலை இடையீட்டுகளை மேற்கொண்டு கால் இழப்புகளை தடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பாதம் பாதுகாப்போம் திட்டம் நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து தேவையற்ற கால் இழப்புகளை தடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட விழைகிறது. எந்த ஒரு நீரிழிவு நோயாளியும் பாதிக்கப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

கோப்புப்படம் (Credit - Getty Images)

நிதி?:தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்கென ரூ.26.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள் மற்றும் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பாத பாதிப்பு கண்டறிதல் மையங்களை நிறுவ உள்ளது.

மேலும் 100 அரசு மருத்துவமனைகள், 21 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும் பாத மருத்துவ மையங்கள் மற்றும் 15 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான வசதிகளை நிறுவுவதன் மூலமாகவும் இந்தத் திட்டம் பாத பராமரிப்பு, கால் புண் தவிர்த்தல், கால் புண் மருத்துவம், நீரிழிவு பாத அறுவை சிகிச்சைகள் மற்றும் புனர்வாழ்வு அம்சங்களையும் ஒருங்கிணைக்கின்றது.

இத்திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரி திட்டத்தினுடைய பலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் கங்கா மருத்துவமனையோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு நீரிழிவு பாத அறுவை மருத்துவம், கால் புண் மருத்துவம் மற்றும் புனரமைப்பு தளங்களில் மேம்பட்ட சேவைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய்களை கட்டுப்படுத்த அரசு புதிய திட்டம்!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details