தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை.. மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! - TN GOVERNOR RN RAVI

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என். ரவி, கோப்புப்படம்
ஆளுநர் ஆர்.என். ரவி, கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 23, 2025, 12:56 PM IST

Updated : Jan 23, 2025, 3:36 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தார். தற்போது, அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் 6-வது நாள் அதாவது ஜனவரி 10-ம் தேதி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கடுமையான சட்டத்திருத்தத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஆய்வுக்குப் பின்னர், குரல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒன்றிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய நகரி சுரக்‌ஷா ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 86 சதவிகிதம் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

சிறுமிகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கினால் தூக்குத் தண்டனை, பெண்களைப் பின் தொடர்ந்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையிலான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

இதையும் படிங்க:5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நிலப்பரப்பில் இருந்து இரும்பின் காலம் தொடங்கியது...முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்!

இந்த நிலையில், அந்த மசோதாக்களுக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருத்தம் செய்யப்பட்ட சட்ட மசோதா விவரம்:

பிரிவு - 64 (1)- பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை. குற்றவாளியின் கடுங்காவல் ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும்பட்சத்தில், இயற்கையாக மரணிக்கும் வரையில் சிறையில் காலத்தை கழிக்க வேண்டும். இவ்வழக்கில் பிணை வழங்கப்படாது எனவும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரிவு 65 (2) - 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிக்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். மேலும், ஒரு கால அளவிற்கு அபராதம் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

பிரிவு 70 (2) - 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுட்காலம் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு கால அளவிற்கு அபராதம் மற்றும் மரண தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 71 - மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

பிரிவு 72 (1) - பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தினால், குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அது ஒரு கால அளவில் ஐந்தாண்டு வரையிலும் நீட்டிக்கப்படும்.

பிரிவு 77 - பாலியல் நோக்கத்துடன் மறைந்து இருந்து பார்க்கும் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள் அல்லது ஐந்தாண்டுகள் வரை சிறை தண்டனை நீட்டிக்கப்படும்.

Last Updated : Jan 23, 2025, 3:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details