சென்னை:தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறையின் கீழ் உள்ள 13 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வதில் ஆளுநர் மற்றும் அரசு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவு வருகிறது. தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்ற பதவியில் இருந்து தமிழ்நாடு ஆளுநரை நீக்கிவிட்டு முதலமைச்சரை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் அந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பணம் தொடர்பான மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்கப்படுகிறது எனவும், மத்திய மாநில அரசின் பொது பட்டியலில் உள்ள கல்வி சம்பந்தமான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு மத்திய அரசின் அனுமதியும் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் துணைவேந்தர்கள் நியமனம் செய்வதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்களின்படி பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை சேர்க்கத் தேவையில்லை எனக்கூறி, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மேலும் திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி பிப்ரவரி மாதமும், ,சேலம், பெரியார் பல்கலைக்கழக மே மாதம் முடிவுறவுள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அலுவலகத்தால் 18 ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழு (Search Committee) பல்கலைக்கழக மானியக் குழுவின் 2018 ஆம் ஆண்டைய நெறிமுறைகள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பினையும் மீறுவதாக உள்ளது என தெரிவித்து, மேற்படி அரசாணையை திரும்ப பெறவும், தேடுதல் குழுவில் நான்காவது நபராக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் தலைவரால் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரை சேர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தி இருந்தார்.