சென்னை : தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அந்த கடித்ததில், “தமிழ்நாடு மின்விநியோக கழக பிரிவு அலுவலகங்களில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில் தாழ்வழுத்த மின்நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூல் செய்வதில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒட்டு மொத்தமாக 2024ம் ஆண்டு தரவுகளின் படி, 3.45 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் ( LT Consumers) மட்டும் சுமார் 3 கோடி மின் நுகர்வோர்கள் உள்ளனர். இந்த 3 கோடி மின் நுகர்வோர்களில் ஒரு பகுதியினர் வங்கி, தபால் நிலையம், இ சேவை மையம் மூலமாகவும், ஒரு பகுதியினர் ( Online Payment) முறையிலும், பெரும்பகுதி ஏழை, எளிய மின் நுகர்வோர்கள் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வருட காலமாக மின்வாரிய தலைமை நிர்வாகம் மின் கட்டண வசூல் முறைகளில் எந்த விதமான உத்தரவுகளும் வழங்காமல், முன்னறிவிப்பும் இல்லாமல் பிரிவு அலுவலங்களில் உள்ள மின்கட்டண வசூல் தொடர்பாக மாற்றங்களை வாய்மொழி உத்தரவின் மூலம் தன்னிச்சையாக செய்து வருவது ஊழியர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள் மின் கட்டணத்தை நேரடியாக செலுத்தி வரும் போது ஊழியர்கள் ஒரு மின் நுகர்வோரிடம் ஒரு மின் கட்டண அட்டைக்கு ரூ.10,000க்குள் இருந்தால் பணமாகவும், காசோலை, வரைவோலை மூலமாகவும் பெற்று வந்தனர்.
இதில் ரூ.10,000க்கு மேல் செலுத்த வரும் மின் நுகர்வோரிடம் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்திட வலியுறுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் தான் மின் நுகர்வோரும் தான் விரும்பும் விதத்தில் மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர்.