நெல்லைக்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வந்தடைந்த வீடியோ காட்சி (Video Credit to ETV Bharat Tamil Nadu) திருநெல்வேலி: தென் தமிழக பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி உட்பட தென் மாவட்டங்களில் நேற்று கனமழை வெழுத்து வாங்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது.
அதனால், அதிகபட்சமாக மணிமுத்தாறில் 55 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை (TNDRF) குழுவின் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில், 90 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்துள்ளனர்.
நெல்லையை மீண்டும் மிரட்டுகிறதா வானிலை?: திருநெல்வேலியில் மழை பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக பேரிடர் மீட்புக் குழுவினர் வந்தடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கெங்கு பேரிடர் மீட்பு பணிகள் தேவைப்படுகிறதோ?.. அந்த இடங்களுக்கெல்லாம் மீட்பு படையினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
ரப்பர் போர்ட், ரப்பர் படகுகளில் உபயோகப்படுத்தும் மோட்டார், லைப் ஜாக்கெட், லைஃப் பாய், மருத்துவ முதலுதவி பெட்டி மற்றும் தண்ணீரை உறிஞ்சி அகற்றும் மோட்டார்கள், மரம் அறுவை இயந்திரம், நீர்மூழ்கி மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள், ஆபத்து கால விளக்குகள், நீண்ட பல வகையான மீட்பு பணிக்கு உதவும் கயிறுகள், தற்காத்துக் கொள்ளும் உபகரணங்கள் என பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளுக்கு உதவும் அனைத்து வகை உபகரணங்களுடன் 90 பேர் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற மீட்பு படையினர் திருநெல்வேலிக்கு விரைந்து வந்துள்ளனர்.
திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சேர்ந்த இந்த மீட்பு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கெங்கு மீட்பு உதவிகள் தேவைப்படுமா, அந்தந்த இடங்களுக்கு உடனடியாக கிளம்பி செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நெல்லையில் அதிரடியாக பேரிடர் மீட்புப் படையினர் வந்துள்ளது, மீண்டும் நெல்லைக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்தது போல, வெள்ளம் வருமா என்ற அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கோடை காலமா?.. மழை காலமா?: பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பருவ மழையின்போது ஏற்படும் மழை வெள்ள பாதிப்பில் தான் இது போன்று பேரிடர் மீட்பு குழுவினர் பயன்படுத்தப்படுவார்கள். ஆனால் தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை நெல்லை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி கோடை வெயிலில் இருந்து மக்களை காப்பாற்றியது. அதே சமயம், தொடர் மழை பெய்தால் தண்ணீராலும் மக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு குழுவினர் நெல்லையில் களமிறக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது, பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கையில் தீவிரம்: தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிக்குள் பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும், நேற்று மலைப்பகுதியில் மிதமான மழை பெய்தது. இருப்பினும் அடுத்து வரும் நாட்களிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மலைப்பகுதியில் அதிக மழை பெய்தால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து நீர் நிலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், தொடர்ந்து மழை பெய்தால் பழமையான வீடுகள் சேதமடைந்து இடிந்து விழ வாய்ப்புள்ளது. எனவேதான் பேரிடர் மீட்பு குழுவினர் முன்னதாகவே தயாராக வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுவன் பழைய குற்றாலம் வெள்ளத்தில் சிக்கியது எப்படி? மாவட்ட ஆட்சியரின் பதில் என்ன?