சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தைக் கலைத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கும்படியும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படியும் 2018ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையிலிருந்தன. 2021ல் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இந்த மேல்முறையீடுகளைத் திரும்பப்பெற உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அரசின் மேல்முறையீடு வழக்குகளில் தன்னை இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயவர்த்தன் அளித்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய விசாரணை அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் கே.குமரேஷ்பாபு அமர்வில் இன்று (ஜன.23) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் தாக்கல் செய்தார்.