விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் 77 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்னர் பட்டம்புதூரில் நடைபெற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வரவேற்றார். விருதுநகர் மாவட்டத்தில் சிறப்புகள் அடங்கிய புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். அதன்பின் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
மறக்க முடியாது:ஈரோடு மண் பெரியாரையும் , காஞ்சிபுரம் மண் அண்ணாவையும், திருவாரூர் மண் கலைஞரை தந்தது போல், விருதுநகர் மண் காமராஜரை தந்தது. காமராஜர் என்றதும் எனது திருமணம் தான் ஞாபகம் வருகிறது. அப்போது காமராஜருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரது கார் திருமண மேடைஅருகே வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் எனது திருமணத்திற்கு வந்து என்னையும், மனைவியையும் வாழ்த்தியதை மறக்க முடியாது.
காமராஜர் இறந்தபோது, ஒரு மகன் போல் இறுதி சடங்கு நடத்தியவர் கலைஞர். காமராஜருக்கு அரசு மரியாதையுடன் அடக்கம், குமரியில் மணிமண்டபம், சென்னை கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர், நெல்லையில் சிலை, காமராஜரின் செயலர் வைரவனுக்கு வேலை மற்றும் வீடு, காமராஜரின் சகோதரி நாகம்மாளுக்கு நிதியுதவி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது என்று அவரது புகழை போற்றியவர் கலைஞர். அவர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திற்கு தாமிரபரணி திட்டம், சாஸ்தா கோயில் அணை என பல்வேறு திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விருதுநகருக்கு வரவுள்ள திட்டங்கள்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். இருக்கன்குடி மாரியம்மன் கோயில் திருப்பணி, ஆயத்த ஆடை பூங்கா, அருப்புக்கோட்டை மருத்துவமனை மேம்பாடு, சிவகாசி அறிவுசார் மையம், புதிய மாநகராட்சி அலுவலகம், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம், மாவட்டத்தில் உள்ள 1,286 கிராமங்களுக்கு ரூ.1387 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 257 சாலை பணிகள் முடிக்கப்பட்டு, 37 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அயன்கொல்லன்கொண்டானில் புதிய தொழிற்பேட்டை, காரியாபட்டி, மல்லாங்கிணர் பேரூராட்சிகளுக்கு புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன.