சென்னை : சென்னை எழும்பூர் நேரு பூங்கா அருகே உள்ள ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பிராங்கிளின், ஆண்டோ, அவரது நண்பர்களான கிஷோர் (எ) தமிழரசன், கலைவேந்தன், மனோகரன் ஆகிய ஐந்து பேர் உள்ளிட்ட 18 பேர் வேனில் கடந்த செப் 6ம் தேதியன்று நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் அமைந்துள்ள மாதா தேவாலயத்திற்கு வழிபாட்டிற்காக சென்றுள்ளனர். அங்கு பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலை வேந்தன், மனோகர் ஆகிய ஐந்து பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானர்.
பின்னர் 5 பேரின் உடலும் மீட்கப்பட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சென்னை நேரு பார்க் ஹவுசிங் போர்டில் அமைந்துள்ள அவர்களது இல்லத்திற்கு நள்ளிரவு 3 மணி அளவில் கொண்டு வரப்பட்டது.
இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி.. மேலும் மூவரை தேடும் பணி தீவிரம்! - Youths Died Drowned in River
இந்நிலையில் இறந்தவர்களின் உடலுக்கு பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள கல்லறையில் 5 பேர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், உயிரிழந்த ஆண்டோ மற்றும் பிராங்க்ளின் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது 5 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என செய்தி கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என அதில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்