தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த குரல் எழுப்புவோம்; முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பு..!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைவரும் ஒன்றாக குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

சென்னை: அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மூன்றாவது மாநாடு அதன் ஒருங்கிணைப்பாளரும், திமுக எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்த மாநாட்டை நடத்துவதற்கு உழைத்த திமுக எம்பி பி.வில்சனுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், மாநாட்டில் பங்கேற்ற அனைத்து தேசிய தலைவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்; அனைத்து பின்னடைவு காலியிடங்களையும் நிரப்புதல், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50 சதவிகித உச்சவரம்பை நீக்குதல், மாநிலங்கள் தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்க தனி அதிகாரம் அளிப்பது போன்றவற்றை தொடர்ந்து பேசிவருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், நாடு முழுவதும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டின் முயற்சிதான் அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பான முதல் திருத்தத்துக்கு பிரதமராக இருந்த நேருவை ஊக்குவிக்க காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என தேசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்கான ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இட ஒதுக்கீடு தீர்வு:

இதையடுத்து, மாநாட்டில் உரையாற்றிய ஒருங்கிணைப்பாளரும், திமுக எம்.பி.-யுமான பி.வில்சன், சாதிகள் பற்றிய விரிவான தரவுகள் இல்லாதது நாட்டில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் தடையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டில் உள்ள இந்த காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது கடினமானது அல்ல என்றார்.

வைகோ: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியபோது, திராவிட இயக்கம் மதச்சார்பின்மையை சமூக நீதியின் முக்கிய அம்சமாக வளர்த்தது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள்தொகை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கி, அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:14 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கிய ஒன்றிய அரசு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை ஏன் வஞ்சிக்கிறது? - அப்பாவு கேள்வி

திருமாவளவன்: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், ''சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதிக்கான நோக்கத்தை முழுமையாக அடைய முடியாது என்றும், அர்த்தமுள்ள சமூக நீதியை அடைய எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹரி பிரசாத்: காங்கிரஸ் முன்னாள் எம்.பி.-யான பி.எல். ஹரி பிரசாத் பேசுகையில், இடஒதுக்கீடு தகுதி மற்றும் செயல்திறனை சமரசம் செய்வதாக திட்டமிட்ட எதிர்மறை பிரச்சாரம் உள்ளதாகவும், அது உண்மையென்றால் 69% வழங்கும் தமிழ்நாடு மந்தமாக இருக்க வேண்டுமே என்றும், ஆனால், மனித வள மேம்பாடு மற்றும் சமூக வளர்ச்சிக் குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டிற்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும் பாராட்டு தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் எம்.பி. மஸ்தான் ராவ், '' சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும், அனைத்து துறைகளிலும் ஓபிசி பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த அவர்கள் பங்கேற்பதை உறுதி செய்தல் அவசியம் என்றும் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சி எம்.பி. ஃபௌசியா தாசீன் ஷமத் கான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, விரைவான பாதையில் செயல்படும் விரைவு நீதிமன்றங்கள் நமக்குத் தேவை. நீதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அதானால் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் அவசியம். அதை செய்ய விருப்பம் கொண்ட அரசு வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பது பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அகிலேஷ் யாதவ்: உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், '' மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த ஆயிரக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினர் போராடி சிறை சென்றதை குறிப்பிட்டு அனைவருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய கைகோர்த்து போராடுவோம் என தெரிவித்தார்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பேசியபோது, முலாயம் சிங் யாதவ், மு. கருணாநிதி போன்ற தலைவர்கள் மக்களுக்கு சமூக நீதி கிடைக்க எப்படி போராட வேண்டியிருந்தது என்பதை அகிலேஷ் யாதவ் விவரித்ததை குறிப்பிட்டு, அந்த நீண்ட சண்டை இன்னும் முடிவடையவில்லை என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details