தருமபுரி:தமிழகத்தில் நாடளுமன்ற தேர்த்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் இன்று (வெள்ளிகிழமை) மாலை தர்மபுரி அடுத்த தடங்கம் பகுதியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தருமபுரியில் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் கோபிநாத் ஆகிய இருவரையும் ஆதரித்து மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளைத் தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு செய்து பொதுக் கூட்ட மேடைக்கான தயாரிக்கும் பணிகளைக் கண்காணித்து வருகிறார். முதலமைச்சர் வருக்கையையொட்டி பிரம்மாண்ட மேடை மற்றும் அலங்கார வளைவுகள், பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் கொடிகள் கட்டப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் விமான நிலையத்தில் இருந்து, கார் மூலம் தருமபுரிக்கு வருகிறார். பின்னர் அவர் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மும்முனை போட்டி:தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். தொகுதியில் வன்னியர் வாக்கு சதவீதம் குறைவான பகுதிகளான அரூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சௌமியா அன்புமணி பிரசாரத்தை துரிதப்படுத்தி வருகிறார். பா.ம.க.வுக்கு பாரம்பரியாமாக உள்ள வன்னியர் வாக்கு வங்கிகளோடு மற்ற சமூகத்தினரின் வாக்குகளையும் கணிசமாக பெற வேண்டும் என்பது இவரது வியூகமாக உள்ளது. அரூரைச் சேர்ந்த முரளிசங்கர் விழுப்புரம் மக்களவை தனித் தொகுதியில் பா.ம.க. சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனையும் குறிப்பிட்டு சௌமியா அன்புமணி வாக்கு சேகரித்து வருகிறார்.