சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த மாதம் 8-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் சீமானுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
பெரியார் பேசியதாக சீமான் குறிப்பட்ட கருத்துக்கு ஆதாரம் கேட்டு அவரை வீட்டை முற்றுகையிடப் போவதாக பல்வேறு பெரியார் இயக்கங்கள் மற்றும் மே 17 இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சீமான் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சீமானை கண்டித்து நடைபெற்ற போராட்டம் (ETV BHARAT Tamilnadu) இந்த்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டுமென அவரது வீட்டை இன்று முற்றுகையிடப் போவதாக பெரியார் இயக்கங்கள் மற்றும் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு முன்பு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிரு்தனர்.
சீமானை கண்டித்து நடைபெற்ற போராட்டம் (ETV BHARAT Tamilnadu) பெரியார் அமைப்புகள் சீமான் வீட்டை முற்றுகையிட வரும் தகவல் அறிந்து சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான் வீட்டு முன்பு குவிந்தனர். அவர்கள் பெரியார் இயக்கங்கள் சீமான் வீட்டை முற்றுகையிட வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என தெரிவித்தனர். இந்த நிலையில் திருமுருகன் காந்தி தலைமையிலான மே 17 இயக்கம் உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட பெரியாரிய அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட வந்தனர்.
சீமான் வீட்டை முற்றுகையிட வந்த 100-க்கும் மேற்பட்டோர் கைது! (ETV BHARAT Tamilnadu) அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து சீமான் வீடு அருகே செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து சீமானை விமர்சனம் செய்வது போல் பதாகைகளை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சீமான் உருவப்படம் பொறித்த பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுக்க முயன்றும் மீறி சாலை மறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து பேருந்து மூலம் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
மேலும் கடந்த வாரம் சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.