சென்னை:தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டிற்கானமுதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (பிப்.19) 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதில் மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறை சார்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "மீன்பிடித் தொழில், இந்தியாவில் ஐந்தாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாட்டைத் திகழவைக்கும் மீனவர்கள் மீது இந்த அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் 2 லட்சத்து 77 ஆயிரம் மீனவர்கள் பயன்பெறும் வகையில், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களும், புதிய பணிகளும் அறிவிக்கப்பட்டன.
மீன்பிடித் தடைக் கால நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது, மாதம் ஒன்றிற்கு 3,400 லிட்டரிலிருந்து 3,700 லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.