திருநெல்வேலி: கோட்டைகருங்குளம் பகுதியில் உள்ள நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கான தண்ணீரை நேற்று (ஜன.24) சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு திறந்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து சுமார் 40 குளங்களுக்குத் தினசரி 60 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும்.
ஒவ்வொரு கால்வாயிலும் 30 கன அடி வீதம், 68 நாட்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படும். குளங்களின் நீர்மட்டம் மட்டம் குறையக் குறைய அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் முறையாகக் கொடுப்பார்கள். மேலும், தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு நதிநீர் இணைப்பு வெள்ளை நீர் கால்வாயில் நீர் போக்கு குறித்து ஆய்வு செய்ய வெள்ளோட்டமாக ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்பொழுது அந்த தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.” எனத் தெரிவித்தார்.
பின்னர் சுதந்திரப் போராட்டத்தில் சந்திரபோஸ் தான் போராட்டத்தை நடத்தி சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருக்கும் போது, தான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று மூன்று முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, தன்னை விடுதலை செய்யக்கோரினார்.
மேலும், மாதம் தோறும் 67 ரூபாய் ஊதியம் பெற்று, பிரிட்டிஷ் ஆட்சியின் சாதனைகளை இந்தியா முழுவதும் எடுத்துரைத்து வந்தார். அவர் வழியில் வந்தவர்கள், அவரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்டவர்கள். அதன் தொடர்ச்சி தான் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.