திருவாரூர்:கூத்தாநல்லூர் வட்டம் பண்டுதக்குடியை சேர்ந்தவர் சுரேஷ் 41. இவர் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராகக் கடந்த 2010ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் ரூ 3.5 லட்சத்தைக் கடனாகப் பெற்று கடனை செலுத்தி வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு அதே சங்கத்தில் 7 லட்சம் மீண்டும் கடன் பெற்றுள்ளார். ஏற்கனவே கட்ட வேண்டிய தொகையைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகை சுமார் ரூ 3.56 லட்சத்தை மாத தவணை தொகையாக ரூ.18 ஆயிரம் கட்ட வேண்டும் என்றாலும் ரூ.2 ஆயிரத்தையும் சேர்த்து ரூ.20 ஆயிரமாகச் செலுத்தி வந்துள்ளார். அதன்படி, 2022ம் ஆண்டு எஞ்சிய தொகையையும் செலுத்தி கடன் தவணை முடிவதற்கு முன்பாகவே கடன் தொகையைச் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், 2023ம் ஆண்டு சுரேஷுக்கு மருத்துவ ஊழியர்கள் சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் தொகை கடன் பாக்கி உள்ளதாகவும் அதனைத் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக இதனை எதிர்த்து சுரேஷ் திருவாரூர் மாவட்ட குறைவீர் ஆணையத்தில் முறையீடு செய்தார்.