திருப்பூர்: பாஜக மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கோயம்புத்தூர் மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
காலை 9.30 மணி அளவில் வாக்குச் சாவடிக்கு வந்த முருகானந்தம் காவி மற்றும் பச்சை நிறத்திலான துண்டு அணிந்திருந்ததால், காவல்துறையினர் அவரை தடுத்து துண்டை அகற்றுமாறு கூறினார்.
அப்போது தேர்தல் சின்னத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடாது எனவும், எந்த நிறத்திலும் துண்டு அணியலாம் எனவும், காவல்துறையினரிடம் விளக்கம் அளித்து துண்டு அணிந்தவாறு வாக்குச்சாவடி மையத்திற்குள் சென்று வாக்கினைச் செலுத்தினார். கோயம்புத்தூரில் 5 மணி நிலவரப்படி, 57.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழாவில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்கு செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க விரும்புகிறோம். சுறுசுறுப்பான தேர்தல் பரப்புரைகள் நடந்திருக்கின்றது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்கின்றார்கள்.
பொதுமக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையான வாக்கினைச் செலுத்த வேண்டும். கடுமையான வெயில் காலம் என்பதால், வாக்காளர்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வதோடு, தங்களது அருகில் உள்ளவர்களையும் வாக்கினைச் செலுத்த வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் யாருடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.
திருப்பூரில் வாக்கிற்குப் பணம் கொடுப்பது குறித்து புகார் அளிக்கச் சென்றபோது மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கு இல்லை. ஆளுங்கட்சியினர் அதிகார பலத்தைப் பயன்படுத்துவதால், வாக்குக்குப் பணம் கொடுப்பது குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
பொதுமக்களுக்குப் பணம் கொடுக்கும் வீடியோ பதிவுகளை முறையாகக் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. காவி நிறத் துண்டு அணிந்து வந்தது குறித்த கேள்விக்கு, தேர்தலில் போட்டியிடும் கட்சி சின்னத்தை மட்டுமே வாக்குச்சாவடிக்குள் கொண்டு செல்லக்கூடாது. எந்த நிறத்திலும் துண்டு அணியலாம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:குடும்பத்துடன் வந்து வாக்களித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி! - Lok Sabha Election 2024