திருப்பூர்:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 01.03.2024 முதல் 22.03.2024 வரை பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில்,தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 6) வெளியானது.
இதில், 4 லட்சத்து 8 ஆயிரத்து 440 மாணவியர்கள், 3 லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்கள், ஒருவர் மட்டும் மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தற்போது அதற்கான பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா காலை 9:30 மணிக்கு வெளியிட்டார். இதில், மாநிலம் முழுவதும் 94.56 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தற்போது, இந்த பொதுத்தேர்வில் திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதற்காக முதன்மை பள்ளிக் கல்வி அலுவலர் கீதாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 10 ஆயிரத்து 440 மாணவர்களும், 12 ஆயிரத்து 802 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 252 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மொத்தம் சதவீதம் 97.45 ஆகும். மேலும், தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்து திருப்பூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 2வது இடம் பிடித்திருந்தாலும், அதற்கு முன்னதாக 2019, 2020ஆம் ஆண்டுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.
நடப்பு ஆண்டும் முதல் இடம் பிடித்ததால், 3வது முறை முதலிடம் பிடித்த மாவட்டம் என்ற பெருமையைத் திருப்பூர் மாவட்டம் பெற்றுள்ளது. சாதனை படைத்த மாணவர்களைத் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் கல்வி அதிகாரி கீதா மற்றும் ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். இதுபோல் அரசுப் பள்ளி அளவிலும் 95.75 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 77 அரசுப் பள்ளிகள் உள்ள நிலையில், 4 ஆயிரத்து 548 மாணவர்கள், 5 ஆயிரத்து 935 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 483 பேர் தேர்வு எழுதினர். அதில், 4 ஆயிரத்து 274 மாணவர்களும், 5 ஆயிரத்து 763 மாணவிகளும் என மொத்தம் 10 ஆயிரத்து 37 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளியானது +2 தேர்வு முடிவு.. தேர்ச்சி விழுக்காடு விபரங்கள்!