திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சித்தப்பாவை வெட்டிகொலை செய்ய முற்பட்டபோது, சித்தி இடையில் வந்து வழிமறித்து படுகாயங்களை ஏற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இச்சம்வத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள திமுக நிர்வாகியின் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தொடர்ந்து, இதனை தடுக்க வந்த அவரது மனைவி மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவரது மனைவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த திமுக நிர்வாகியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.