கன்னியாகுமரி:திருநெல்வேலியில் இருந்து வாரம் ஒரு முறை மேற்குவங்க மாநிலத்தின் ஷாலிமாருக்கு (Tirunelveli - Shalimar) செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதாவது, தெற்கு ரயில்வே திருநெல்வேலியிலிருந்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், விஜயவாடா வழியாக மேற்குவங்கத்தின் தலைநகர் ஷாலிமாருக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்து இயக்கி வருகிறது. இந்த ரயில் 2 முறை நீட்டிப்பு செய்து தொடர்ந்து சிறப்பு ரயிலாக இயங்கி வருகின்றது.
இந்த ரயிலின் அறிவிப்பு காலம் முடிந்த பிறகு, மீண்டும் சிறப்பு ரயிலாக அறிவித்து தொடர்ந்து இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கன்னியாகுமரியிலிருந்து ஹவுராவுக்கு திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை வழியாக வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இந்த ரயில் 2003ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, இதுவரை வாராந்திர ரயில் சேவையாகவே இயக்கப்பட்டு வருகிறது.
அமித் பாரத் ரயில்:தென்மாவட்டங்களில் இருந்து இந்தியாவின் கிழக்கு பகுதி மாநிலங்களுக்கு கூடுதல் ரயில் சேவை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது திருநெல்வேலியிருந்து ஷாலிமாருக்கு இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்தான், அமித் பாரத் ரயில் பெட்டிகள் வந்த பிறகு அமித் பாரத் ரயிலாக இயக்கப்பட இருக்கின்றது. இது ரயில்வே துறையின் திட்டம் ஆகும். இந்த ரயிலில் 13 ஏசி பெட்டிகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் இந்த ரயில் சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்படுவதால் தென்மாவட்ட பயணிகள் மாநில தலைநகருக்குச் செல்ல வாராந்திர ரயில் சேவை கூடுதலாகக் கிடைக்கும்.
திருவண்ணாமலை ரயில் இணைப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து நேரடியாக திருவண்ணாமலைக்குச் செல்ல எந்த ஒரு ரயில் சேவையும் தற்போது இல்லை. ஆனால் திருநெல்வேலி - திருவண்ணாமலைக்குச் சிறப்பு ரயிலையும் சேர்த்து வாரத்துக்கு மூன்று ரயில் சேவை உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட இருப்புப் பாதைகள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ளதால்தான், தமிழ்நாடு வழியாக பயணிக்கும் இதுபோன்ற ரயில்கள் மதுரை கோட்டத்தில் உள்ள திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.