மதுரை: கோடை காலம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலைs சமாளிக்க திருநெல்வேலி - பெங்களூர் எலகங்கா இடையே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி - எலகங்கா சிறப்பு ரயிலானது (06045), வரும் மே 22, 29 மற்றும் ஜூன் 5, 12 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருநெல்வேலியிலிருந்து மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு எலகங்கா சென்றடையும்.
அதேபோல், எலகங்கா - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06046) மே 23, 30 மற்றும் ஜூன் 6, 13 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் எலகங்கானாவிலிருந்து அதிகாலை 05.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 06.45 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த எலகங்கா - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படுகிறது.