திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நடுக்கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, நேற்று கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், இன்று (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை, கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் பணிகள் இன்று (டிசம்பர் 22) ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியுள்ளது. இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலிருந்து உதவி ஆட்சியர் சாச்சி, கேரள சுகாதாரத்துறை அலுவலர் கோபக்குமார் உட்பட 20க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நெல்லை வந்துள்ளனர்.
கழிவுகளை அகற்றும் விடீயோ காட்சிகள் (ETV Bharat Tamil Nadu) தொடர்ந்து, நடுக்கல்லூரில் உள்ள அரசு பள்ளியில் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இரு தரப்பு ஆலோசனைக்கு பிறகு தற்போது கேரளா குழுவினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நடுக்கல்லூர் கோடககநல்லூர், மேலத்திடியூர் ஆகிய பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை, டாரஸ் லாரிகளில் அள்ளிச் செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, பொக்லைன் (ஜேசிபி) எந்திரம் மூலமாக கழிவுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. கழிவுகள் கேரளாவுக்கு செல்வதை உறுதிப்படுத்த தமிழக - கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒவ்வொரு குழுவிற்கும் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் (ETV Bharat Tamil Nadu) டன் கணக்கில் கொட்டப்பட்ட கழிவுகள்:
நெல்லை அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் டன் கணக்கில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த மனோகர் (51), மாயாண்டி (42) ஆகியோர் டிசம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க:நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள்! கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்டதா?
இதனையடுத்து, சட்டவிரோதமாக கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை மூன்று நாட்களுக்குள் அகற்ற கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதற்கிடையில், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் புற்றுநோய் மையம் மற்றும் தனியார் மருத்துவமனை கழிவுகள் என்பதை உறுதி செய்வதற்காக சில மருந்து ஆவணங்களை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சேகரித்து பசுமைத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைத்தது.
கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்கள் (ETV Bharat Tamil Nadu) கேரள அதிகாரிகள் ஆய்வு:
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், நேற்று (டிசம்பர் 20) வெள்ளிக்கிழமை கேரள மாநில மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் பின்சி அகமது, சுகாதாரத்துறை அலுவலர் கோபுகுமார் ஆகியோர் தலைமையில், 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழு, நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுடன் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் இருவர் கைது:
இந்த விவகாரத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கூடுதலாக 3 வழக்கு என மொத்தம் ஆறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, கேரளா மாநிலம் மருத்துவ கழிவுகள் மேலாண்மை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஜித்தன் ஜார்ஜ் ஆகிய இருவரை, நேற்று (டிசம்பர் 21) சனிக்கிழமை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து, செல்லத்துரை லாரியில் தான் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்து லாரயை பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மக்களுக்கு வெற்றி
மருத்துவ கழிவு கொட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், வரலாற்றில் முதல் முறையாக கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில், கேரள அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கழிவுகள் மீண்டும் கேரளாவிற்குச் செல்வது நெல்லை மாவட்ட மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.